தமிழ் புத்தாண்டு மற்றும் அதன் முக்கியத்துவம்


cookscape Interior

தமிழ் காலக் கணக்கீட்டின்படி பிரபவ வருடம் தொடங்கி அட்சய வருடம் வரை அறுபது வருடங்கள் சுழற்சி முறையில் கணக்கிடப்படுகிறது. ஓரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இதில் பங்குனி முடிந்து சித்திரை மாதத்தின் துவக்கம் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகின்றது. பிற கலாச்சார வழக்கங்களில் சூரியன் அல்லது நிலவை அடிப்படையாக கொண்டு காலத்தையும் விழாக்களையும் முடிவு செய்வார்கள்.

ஆனால், நிலவு மற்றும் சூரியன் இரண்டின் மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு நமது மாதங்கள் மற்றும் முக்கிய பண்டிகைகளை நிர்ணைகின்றோம்.

நிலவின் சுழற்சியின் அடிப்படையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்றவையும், சூரியனை அடிப்படையாக கொண்ட பூமியின் சுழற்சியை வைத்து பருவகாலங்கள், பொங்கல், வருட பிறப்பு, ஆடி பெருக்கு போன்ற பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு பருவத்திலும் விளையும் பொருட்கள் அந்தந்த பருவத்தில் நமது உடல் நிலையை பேணி காக்க உகந்தது என்பதால் நமது பண்டிகைகளில் பருவம் சார்ந்த உணவுகளை வழிபாட்டிற்கு உபயோகப் படுத்துவதையும் அதை உண்பதையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.

சித்திரைத் திருநாள் என்பது தமிழ் வருடத்தின் முதல் நாள். நமது வாழ்வியல் முறை விவசாயம் சார்ந்ததாக இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகின்றது. நமது பாரம்பரியத்தில் தைப் பொங்கலை அறுவடை காலப் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். அறுவடை முடிந்து விளைபொருட்களை சந்தைப் படுத்திவிட்டு தங்களுக்கான தானியங்களை கையிருப்பு வைத்துக் கொள்வார்கள். சித்திரையில் இருந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட கால நிலை நிலவுவதால் விவசாய வேலைகள் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே சித்திரை தொடங்கி அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு உறவினர்கள் ஒன்று கூடி நிறைய பண்டிகைகளை கொண்டாடுவார்கள். உதாரணமாக மாரியம்மன் , காவல் தெய்வங்கள் , குல தெய்வங்களின் வழிபாட்டை விழாவாக கொண்டாடுவர்கள். மீண்டும் பருவ மழை தொடங்கியவுடன் வழக்கமான விவசாய வேலைகளும் பயிர்த் தொழில் சார்ந்த பணிகளும் ஆரம்பமாகி விடும்.

எனவே வருடத்தின் முதல் நாளான சித்திரை முதல் நாளன்று கடவுள் வழிபாட்டுடன் கொண்டாட்டங்களுடன் தொடங்குவார்கள்.

கோடை காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு வேப்பம்பூ போன்ற மருத்துவ குணமிக்க உணவுப் பொருட்களை பிரசாதமாக படைத்து, உண்டு கொண்டாடுவார்கள்.

நாம் தொடங்கும் புத்தாண்டை வரவேற்க வீடுகளை சுத்தம் செய்து மா, பலா, வாழை ஆகிய முக்கணிகள் உடன் நகைகள், தானியங்கள் , வெற்றிலை பாக்கு முதலிய பொருட்களை அழகாக இட்டு வழிப்பாட்டு அறையை அலங்காரம் செய்து காலை எழுந்தவுடன் கானுவதை பழக்கமாக வைத்துள்ளோம்.

பழையன மறந்து புதிய ஆண்டை இ னிமையானதை கண்டு உற்சாகத்துடனும் நேர்மறையான எண்ணங்களுடன் தொடங்க இந்நாள் வழி வகுக்கின்றது.

கிருமித் தொற்று காரணமாக நம் அனைவரும் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்த சந்தர்ப்பத்தை, நாம் நமது சுய பரிசோதனைக்கான நாட்களாகவும் நமது நடவடிக்கைகளை செம்மைப்படுத்தும் திட்டங்களை வகுபபதற்கான நல்வாய்ப்பாகவும் பயன்படுத்தி, இந்த சோதனைக் காலத்தை, வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்கும் சாதனை காலமாக மாற்றி வெற்றி பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

cookscape Interior

Architect - Sowmithra